வெசாக் அட்டைகளை அச்சிடுவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 520 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி மீண்டும் நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவேல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இன்றைய விசாரணையின்போது, குறித்த சம்பவம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட 12, 13 மற்றும் 14ஆவது சாட்சியாளர்களிடம் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை குறித்த வழக்கு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சாட்சிய அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
2013ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி முதல் ஜூன் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சிவில் வானூர்திப் போக்குவரத்துஅமைச்சராகப் பதவி வகித்தபோது 3,000 வெசாக் அட்டைகளை அச்சிட்டு அரசாங்கத்திற்கு ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 520 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.