Posted in

சிறைச்சாலையில் உள்ளவர்களும் மனிதர்களே! – நாமல் ராஜபக்ச

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புச் சம்பவங்களைத் தனித்தனியான சம்பவங்களாகக் கருத முடியாது எனவும், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், சிறைச்சாலைக்குள் இருப்பவர்களும் அரசின் பாதுகாப்பிலேயே வாழும் மனிதர்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதாக அவர் தனது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்ததாகவும், மரண விசாரணை அறிக்கைகளின்படி அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களாலும், 11 பேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியும் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மற்றுமொரு உயிரிழப்புச் சம்பவம் மற்றும் குருநாகல், கொபேகனே பகுதியில் 41 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் ஆகியவையும் அரச காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், சட்ட மருத்துவ அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தீவிர கவனம் செலுத்தி, சுயாதீன விசாரணைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

“சட்டத்தின் ஆட்சி தெரிவுசெய்யப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்போது அதன் அர்த்தம் இல்லாமல் போகிறது. அரசியல் இலாபங்களுக்கு அப்பால் சென்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அவரது வாழ்வுரிமை, கண்ணியம் மற்றும் பாதுகாப்பை ஒருபோதும் பறிக்க முடியாது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *